ராஜ்பவனுக்கு அடிக்கடி வரும் பா.ஜனதா தலைவர்களால் கவர்னருக்கு அவப்பெயர் - சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கு
ராஜ்பவனுக்கு அடிக்கடி பா.ஜனதா தலைவர்கள் வருகையால் கவர்னருக்கு அவப்பெயர் ஏற்படுவதாக சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கி உள்ளார்.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் எம்.எல்.சி. பதவியில் நியமிக்க கோரும் மாநில மந்திரிசபையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியையும், பாரதீய ஜனதாவையும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து வருகிறார்.
சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் நேற்று சஞ்சய் ராவத் எழுதியிருந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 60 ஆண்டுகளாக தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பலவீனப்படுத்தும் கொள்கையை மத்தியில் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டு இருந்தன. மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 9 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களை கலைத்தார்.
இதுபோன்ற பணிகளுக்கு கவர்னரின் அரசியலமைப்பு பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. பிற அரசியல் கட்சிகளின் அரசாங்கங்கள் மாநிலங்களில் ஆட்சியில் இருக்க அனுமதிக்காத மத்திய அரசின் செயல் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்படும் ஒரு கும்பல் ஆட்சி மனநிலை ஆகும். இத்தகைய கும்பல் ஆட்சி மனநிலைக்கு எதிராக பாரதீய ஜனதா பல ஆண்டுகளாக போராடி வந்துள்ளது.
கவர்னருக்கு அவப்பெயர்
ஆனால் இ்ங்கு சரி எது, தவறு எது என்பதை வேறுபடுத்தி பார்க்கும் உணர்வை எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) இழந்து விட்டது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மாநிலத்தில் அராஜகத்தின் நெருப்பை துண்டிவிட அந்த கட்சி நினைக்கிறது.
கவர்னர் இன்னும் பாரதீய ஜனதா தலைவராக இருப்பது போல் அக்கட்சி தலைவர்கள் ராஜ்பவனில் அடிக்கடி சந்திப்பதால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.
மராட்டியத்தில் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்பது கவர்னருக்கு தெரியும். அவர் புத்திசாலி. ராஜ்பவனுக்கு எத்தனை முறை வருகை தந்தாலும், தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்.
எதிர்க்கட்சிக்கும், ராஜ்பவனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story