ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு


ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 27 April 2020 5:46 AM IST (Updated: 27 April 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடுபவர்களை ஆளில்லா விமானம் மூலம் சிவகங்கை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சிவகங்கை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்காக மதியம் ஒரு மணி வரை மட்டும் மக்கள் வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் சிவகங்கை நகரில் இளைஞர்கள் பலர் தடை உத்தரவை மீறி வெளியில் நடமாடி வருகின்றனர். மேலும் பலர் கண்மாய் கரை மற்றும் முட்புதர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அமர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் நடமாட்டத்தை தற்போது ஆள்இல்லாத விமானம் மூலம் கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், முருகேசன், வெள்ளைச்சாமி மற்றும் போலீசார் சிவகங்கை நகர் கொட்டகுடி மற்றும் பைபாஸ் ரோடு பகுதியில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு கண்காணித்தனர்.

இது தொடர்பாக நகர் இன்ஸ்பெக்டர் மோகன் கூறியதாவது, தற்போது சோதனை முறையில் 2 இடங்களில் ஆள்இல்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இனி தொடர்ந்து சிவகங்கை நகரை சுற்றி கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிவகங்கை காந்தி வீதி மற்றும் அரண்மனை வாசல் பகுதிகளில் அனுமதி பெறாத வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story