காதல் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


காதல் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 April 2020 6:07 AM IST (Updated: 27 April 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி, 

காதல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

காதல் திருமணம்

கன்னியாகுமரி ஜோசப் தெருவை சேர்ந்தவர் மெல்வின். இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாவார். இவருடைய மனைவி வினிஷ்டா. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள். இவர்களின் இளைய மகன் ஆன்டணி கனி வளன் (வயது 24), பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவருக்கும், இனயம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்தது. இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்று கொண்டதாகவும், அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அப்போது ஆன்டணி கனி வளன் திருமணத்தை வருகிற 4-ந்தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று மாலை வினிஷ்டா, மகனுக்கு காபி கொடுக்க சென்றார். அப்போது அவர் அறைக்கதவு பூட்டி இருந்தது. பல முறை கதவை தட்டியும் திறக்காததால், அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்குள்ள மின்விசிறியில் ஆன்டணி கனி வளன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மகன் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு விரைந்து வந்து, ஆன்டணி கனி வளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

காரணம் என்ன?

இதுபற்றி கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆன்டணி கனி வளனுக்கு திருமண நிச்சய தார்த்தம் முடிந்த பிறகு, தன் வருங்கால மனைவியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமண கோலத்தில் பார்க்க இருந்த ஆன்டணி கனி வளன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story