குமரி மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் 2½ ஆண்டாக பழகி நகையை அபகரித்தது அம்பலம்
குமரி மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 2½ ஆண்டாக பழகி அந்த பெண்ணிடம் நகையை அபகரித்தது அம்பலமாகி உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 2½ ஆண்டாக பழகி அந்த பெண்ணிடம் நகையை அபகரித்தது அம்பலமாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் டாக்டர்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), பட்டதாரியான இவர், சென்னை பெண் டாக்டருடன் நெருங்கி பழகி உள்ளார். அப்போது அந்த பெண் டாக்டரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி அவரிடம் பணம் பறித்தார். இதுதொடர்பாக பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் காசியை கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. பெண் டாக்டரை போன்று மேலும் பல பெண்களை தனது வலையில் காசி வீழ்த்தியது தெரியவந்தது. அதாவது, சமூக வலைதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி பெண்களை ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நாங்குநேரி ஜெயிலில் அடைத்தனர். மன்மதனாக வலம் வந்த காசியின் உண்மையான முகம், பெண் டாக்டர் கொடுத்த புகாரால் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.
செல்போன், லேப்டாப்
இந்த நிலையில் கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காசி பயன்படுத்திய செல்போன், லேப்டாப், ஒரு விலை உயர்ந்த கெடிகாரம் மற்றும் 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஏராளமான பெண்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காசி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றினர்.
அந்த புகைப்படங்களில் காசியுடன் உள்ள ஆண் நண்பர்களை போலீசார் அடையாளம் கண்டனர். சம்பந்தப்பட்ட நண்பர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதாவது, செல்போன் மற்றும் லேப்-டாப் உள்ளிட்டவற்றில் ஏதேனும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்துள்ளார்களா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கில் ஏதேனும் தகவல்கள் உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் சிலருடன் காசி நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காசிக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் எந்த வகையில் நெருக்கம் என்பது தொடர்பாகவும் விசாரணையும் நடந்து வருகிறது.
மேலும் ஒரு பெண் புகார்
இந்தநிலையில் நேற்று இரவு ஆன்லைன் மூலமாக 25 வயது மதிக்கத்தக்க என்ஜினீயரிங் பட்டதாரி பெண் ஒருவர் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதில், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த என்னிடம் காதலிப்பதாக கூறி காசி 2½ வருடமாக பழகினான். அப்போது, அவனிடம் நெருக்கமாக இருந்தேன். அந்த சமயத்தில் அந்த காட்சியை செல்போன் மூலம் படம் எடுத்தான். இவனைத் தானே திருமணம் செய்ய போகிறேன் என்ற எண்ணத்தில் சும்மா இருந்து விட்டேன். இதனையடுத்து என்னிடம் அவசர தேவை என்று கூறி நகை வாங்கினான். பிறகு சில நாட்கள் கழித்த பிறகு நகையை திருப்பி கேட்ட போது, அவனது உண்மையான சுயரூபம் மெல்ல, மெல்ல தெரிய வந்தது.
உன்னுடைய ஆபாச படம் என்னிடம் இருக்கிறது, நகையை திருப்பி கேட்டால் சமூக வலை தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினான். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு அவனிடம் இருந்து விலகி விட்டேன். பெண் டாக்டரை மிரட்டியதை போன்றே என்னையும் மிரட்டினான். பல பெண்களை ஏமாற்றிய காசி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியை சேர்ந்த மன்மதன், உள்ளூர் முதல் வெளி மாவட்டத்திலும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி உள்ளார். அந்த பெண்களும் புகார் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் காசி மீது மேலும் பல வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story