திருச்சியில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது


திருச்சியில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது
x
தினத்தந்தி 27 April 2020 8:46 AM IST (Updated: 27 April 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது.

திருச்சி,

திருச்சியில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது.

106 டிகிரி வெயில்

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தான் ஆரம்பிக்கிறது. அதற்கு முன்னதாகவே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டியபடி தாக்கியது.

அதிக பட்சமாக நேற்று முன்தினம் திருச்சியில் வெயில் அளவு 106 டிகிரியாக பதிவாகி இருந்தது. கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் இதனால் கடும் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

நேற்றும் காலையில் இருந்தே திருச்சியில் வெயில் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திடீர் என வானில் மேகங்கள் சூரிய கதிர்களை மறைத்தன. மதியம் 12.30 மணி அளவில் வானில் திரண்டிருந்த கருமேகங்கள் மழைத்துளியாக மாறின. முதலில் லேசாக தூறத்தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த இந்த மழையால் திருச்சி நகரில் விமான நிலையம், மன்னார்புரம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழை திருச்சியில் கோடை வெப்பத்தை ஓரளவு தணித்தது. மழையால் மண்குளிர்ந்ததால் ஒருவாரமாக வெயிலில் தவித்த மக்களுக்கு ஓரளவு இதமான சூழலை உருவாக்கியது.

Next Story