ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றிய பொதுமக்கள் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
அரவக்குறிச்சி, ஈசநத்தம் பகுதிகளில், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றிய பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி, ஈசநத்தம் பகுதிகளில், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றிய பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அத்தியாவசிய தேவைகளான காய்கறி உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்கவும், அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் வீதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அந்த வாகனங்கள் படிப்படியாக உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
நடமாட்டம் அதிகம்
கரூர் மாவட்டத்தில், ஊரடங்கு எப்படி உள்ளது? என்றும், மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் இருக்கிறதா? என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மற்றும் போலீசார் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மெயின்ரோடு, கடைவீதி, ஈசநத்தம் கடைவீதி, கரூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் காலை நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், பால்வாங்க போகிறோம், காய்கறி வாங்க செல்கிறோம் என ஏதாவது காரணத்தை சொல்கின்றனர். மேலும் தினமும் சாலைகளில் சாரை, சாரையாக வந்து கொண்டேதான் உள்ளனர். ஊரடங்கு வேளையில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அங்கு அதிகம் உள்ளதால் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை, முக கவசமும் அணிவதில்லை.
இதுதொடர்பாக முழுமையாக ஊரடங்கை கடைபிடித்து, சமூக இடைவெளியை பின்பற்றி வரும் சிலர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டிற்கு ஒருவர் சென்றால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அரவக்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றனர். விபரீதம் தெரியாமல் நடந்து கொள்கின்றனர். அவரவர் தாங்களாகவே தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வெளியே வராமல் இருப்பது நல்லது என்றனர்.
Related Tags :
Next Story