மாவட்ட பகுதியில் பலத்த மழை: லாலாபேட்டையில் சூறாவளி காற்றுக்கு 2 ஏக்கர் வாழைகள் நாசம்
மாவட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் லாலாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் 2 ஏக்கர் வாழைகள் நாசமானது.
லாலாபேட்டை,
மாவட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் லாலாபேட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் 2 ஏக்கர் வாழைகள் நாசமானது.
பலத்த மழை
கோடை காலம் என்பதால் கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் பொதுமக்கள் வெப்ப காற்றால் அவதிப்பட்டு வந்தனர். எனினும் அவ்வப்போது மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் லாலாபேட்டை பகுதியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன், மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இந்த சூறைக்காற்றில், லாலாபேட்டை பகுதியில் உள்ள பிள்ளைபாளையம், மகாதானபுரம், மேட்டுமகாதானபுரம், கம்மநல்லூர், பொய்மைபுத்தூர் விவசாயிகள் பயிரிட்டு இருந்த சுமார் 2 ஏக்கர் கற்பூரவல்லி வாழைகள் கீழே சாய்ந்து நாசமாகியது.
விவசாயிகள் கவலை
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால் விற்பனை செய்ய முடியாமல் விளைந்த நிலையில் இருந்த வாழைகளை விவசாயிகள் வெட்டாமல் இருந்துள்ளனர். இந்தநிலையில் பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்து முழுவதும் நாசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் வாழை உற்பத்தி குழு தலைவர் ஜெயபால் கூறுகையில், இயற்கை இடர்பாடுகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும், என்றார்.
குளித்தலை, கிருஷ்ணராயபுரம்
இதேபோல், குளித்தலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக குளித்தலை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் நள்ளிரவு வரை மின்சாரம் விட்டு, விட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மதியமும் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், சேங்கல், முனையனூர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன், கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
Related Tags :
Next Story