கொள்முதல் செய்ய ஆட்கள் வராததால் தோட்டத்திலேயே வீணாகும் மரவள்ளி கிழங்குகள் விவசாயிகள் கண்ணீர்
கொள்முதல் செய்ய ஆட்கள் வராததால் கறம்பக்குடி பகுதியில் மரவள்ளி கிழங்குகள் தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கறம்பக்குடி,
கொள்முதல் செய்ய ஆட்கள் வராததால் கறம்பக்குடி பகுதியில் மரவள்ளி கிழங்குகள் தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மரவள்ளி கிழங்கு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். ஏரி, குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் மூலமே அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகின்றன. நெல், கரும்பு, வாழை, கடலை, சோளம் போன்றவை இப்பகுதிகளில் பயிர் செய்த போதிலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் மரவள்ளி கிழங்குகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கிழங்குகளை வாங்கி செல்ல வியாபாரிகள் வரவில்லை. இதனால் அறுவடை செய்யப்பட்ட நிலையிலும், அறுவடை செய்யப்படாமலும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரவள்ளி கிழங்குகள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் செய்வதறியாவது கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
இதுகுறித்து மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்திருந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தண்ணீர் தேவை குறைவு, பராமரிப்பு அதிகமாக இல்லை என்பதற்காக வயல்களின் தன்மைக்கு ஏற்ப மரவள்ளி கிழங்குகளை சாகுபடி செய்தோம். ஆண்டுதோறும் சேலம், நாமக்கல் பகுதிகளிலிருந்து மாவு ஆலைக்காக வியாபாரிகள் வந்து மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அறுவடை பணிகள் தொடங்கிய வேலையில் ஊரடங்கு அமலாக்கத்தால் கொள்முதல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் தோட்டங்களிலேயே மரவள்ளி கிழங்குகள் வீணாகி வருகின்றன.
எங்களது உழைப்பு வீணாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எஞ்சி உள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story