சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கிராம பகுதிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்


சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கிராம பகுதிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 April 2020 11:57 AM IST (Updated: 27 April 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கிராம பகுதிகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், 

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கிராம பகுதிகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம பகுதிகளில் இன்னும் கூட கொரோனா வைரஸ் குறித்து போதிய அளவு விழிப்புணர்வை கூட பொதுமக்களிடம் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தவில்லையாம். பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லையாம்.

லாடபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி பழுதாகி பயன்பாடில்லாமல் போனதால், அதனை சுற்றியுள்ள பகுதிகள் இயற்கை உபாதை கழிக்கும் இடமாக மாறியுள்ளது. இதேபோல் பள்ளி அருகேயும் உள்ளது. கொரோனா பாதித்த தீயணைப்பு வீரரின், நண்பர் ஒருவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

லாடபுரம் ஊராட்சியில்...

ஆனாலும் லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள இடம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. புதிதாக வந்த குப்பை தொட்டிகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே பயன்பாடில்லாமல் வைக்கப்பட்டுள்ளன. வடிகால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணிகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலப்புலியூரில்...

இதேபோல் மேலப்புலியூர் கிராம ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வழக்கம் போல் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றனர். மேலும் கோவில்களில் கூட்டமாக அமர்ந்து தாயம், சீட்டு விளையாடி வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியின் வளாகத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மேலும் குப்பை தொட்டிகள் சேதமடைந்து காணப்படுகிறது. வடிகால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே மேலப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story