கோவில்பட்டி பகுதியில் 1,708 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டி பகுதியில் 1,708 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி,
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார துறையினர், போலீசாருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து தூய்மை பணியாளர்கள், நகரசபை ஊழியர்கள் மற்றும் கோவில்பட்டி துணை கோட்ட போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் என மொத்தம் 700 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின் மாத்திரைகள், கை கழுவும் திரவம், முககவசம் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் அவர், கோவில்பட்டி-பசுவந்தனை ரோடு பாரதி நகரில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 170 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி நகரசபை சலவைத்துறையில் 241 சலவை தொழிலாளர்களுக்கும், எட்டயபுரம் ரோடு சலவைத்துறையில் 172 தொழிலாளர்களுக்கும், வள்ளுவர்நகர் சலவைத்துறையில் 123 தொழிலாளர்களுக்கும், அத்தைகொண்டான் சலவைத்துறையில் 130 தொழிலாளர்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள்
பின்னர், பங்களா தெரு வித்யபிரகாசம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் 30 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரண பொருட்களும், கோவில்பட்டி இனாம் மணியாச்சி ரேஷன் கடையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 65 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களும், கோவில்பட்டி பயணியர் விடுதியில் வாடகை கார் டிரைவர்கள் 77 பேருக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் இளங்கோ, யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி, துணை தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story