‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் 28 நாட்கள் கொரோனா தொற்று இல்லை என்றால் தடை நீக்கம்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் 28 நாட்கள் தொடர்ந்து யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றால் தடை நீக்கம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 46 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 13 பேருக்கு சேலம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் நாமக்கல், லத்துவாடி, மணப்பள்ளி, வேலூர், பரமத்தி, கொக்கராயன்பேட்டை, வெண்ணந்தூர், ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த தெருக்கள் மற்றும் அருகில் உள்ள தெருக்கள் என 25-க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு போலீசார் ‘சீல்’ வைத்து உள்ளனர். ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் இந்த பகுதிகள் தகர தகடுகளால் அடைக்கப்பட்டு உள்ளன.
அங்கு வெளியாட்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதேபோல் அங்கு வசிப்பவர்களும் வெளியே வர அனுமதி இல்லை. அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இருப்பினும் தங்கள் பகுதிகளில் எப்போது ‘சீல்’ அகற்றப்படும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதித்த நபர்கள் வசித்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் கொரோனா அறிகுறி உள்ள நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து 28 நாட்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வரும் பட்சத்தில் ‘சீல்’ அகற்றப்பட்டு தடை நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story