ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது


ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை- பணம் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 April 2020 10:45 PM GMT (Updated: 27 April 2020 9:20 PM GMT)

ஈரோட்டில் ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை மீட்கப்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 43). ஜவுளி நிறுவன உரிமையாளர். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் ருந்த 6 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

திருடர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயரத், பழனிவேல், ராமராஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சம்பவத்தன்று 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (38), மேட்டூர் நங்கவள்ளியை சேர்ந்த ஏழுமலை (28), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (24) ஆகியோர் என்பதும், மற்றொருவர் ஈரோடு எல்லப்பாளையத்தை 18 வயது வாலிபர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இளங்கோவின் வீட்டில் நகை-பணத்தை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகையை மீட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story