குடும்பத் தகராறில் 3-வது மனைவியை குத்திக்கொன்ற பார் ஊழியர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் 3-வது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவன்சன் (வயது 52). இவர், கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஸ்டீவன்சன், வல்லாஞ்சேரி கிராமத்தில் தனது 3-வது மனைவி உமா (38) என்பவருடன் வீட்டிலேயே இருந்து வந்தார்.
நேற்று அதிகாலையில் ஸ்டீவன்சன், அவருடைய 3-வது மனைவி உமா இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டீவன்சன் வீட்டில் இருந்த கத்தியால் உமாவின் நெற்றியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த உமா, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பார் ஊழியர் தற்கொலை
இதனால் பயந்து போன ஸ்டீவன்சன், நந்திவரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குமுதாவின் மகள் திவ்யாவுக்கு போன் செய்து குடும்பத் தகராறில் உமாவை கொலை செய்து விட்டதாகவும், தானும் சாகப்போவதாகவும் கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். பின்னர் ஸ்டீவன்சன், வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில் தனது தந்தை போனில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யா, தனது உறவினர்களுடன் வல்லாஞ்சேரிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் உமா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஸ்டீவன்சன் தூக்கில் பிணமாக தொங்கினார். பூட்டிய வீட்டுக்குள் இரு வரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலையான உமா, தற்கொலை செய்த ஸ்டீவன்சன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story