மாங்காடு அருகே, டிரைவர் கொலையில் 3 பேர் கைது - கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்


மாங்காடு அருகே, டிரைவர் கொலையில் 3 பேர் கைது - கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்
x
தினத்தந்தி 28 April 2020 4:30 AM IST (Updated: 28 April 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி, 

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). டிரைவரான இவர், நேற்று முன்தினம் நண்பருடன் அங்குள்ள செங்கல் சூளைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மர்மநபர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மர்மநபர்கள் ரஞ்சித்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பொற்பாதம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக மலையம்பாக்கத்தைச் சேர்ந்த விமல் (22), பிரேம்குமார்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரை திருமழிசையில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைதான விமல், போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-

தாயுடன் கள்ளத்தொடர்பு

எனது தாயுடன் ரஞ்சித்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதை பலமுறை நேரில் பார்த்த நான், ரஞ்சித்குமாரை கண்டித்தேன். எனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் நான், எனது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தேன்.

எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ள ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான், எனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டேன். அதன்படி ஊரடங்கு காரணமாக வேலை இன்றி வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை, அவரது நண்பர் ஒருவர் மூலமாக சிகரெட் பிடிக்க வரும்படி செங்கல் சூளைக்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தேன். எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story