ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்து சாப்பிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளப்பெரம்பூர்,
ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்து சாப்பிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போக்குவரத்து தடை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வல்லத்தில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மேலும் சாலையில் தேவையில்லாமல் ஒன்று கூடி நிற்பவர்கள், கிரிக்கெட், கைப்பந்து விளையாடுபவர்களை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
கறி விருந்து
இந்த நிலையில் வல்லத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னம்பட்டியில் சிலர் கிடா வெட்டி கறி விருந்து நடத்தி கும்பலாக அமர்ந்து பெரிய வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று சென்னம்பட்டிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னம்பட்டியை சேர்ந்த சரத்குமார்(வயது 25), செல்வம்(25), ராமச்சந்திரன்(20), சிவக்குமார்(20), அருண்குமார்(22) உள்ளிட்டோர் கறி விருந்தில் பங்கேற்றது தெரிய வந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், செல்வம், ராமச்சந்திரன், சிவக்குமார், அருண்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கறி விருந்து சாப்பிடும் படங்களையும், வீடியோவையும் சமூக வலை தளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story