கோடை காலத்தில் முடங்கிய குளிர்பான உற்பத்தி கூடங்கள் வருவாய்க்கு வழியின்றி தொழிலாளர்கள் தவிப்பு
கோடை காலத்தில் குளிர்பான உற்பத்தி கூடங்கள் முடங்கி கிடப்பதால் வருவாய்க்கு வழியின்றி தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
மன்னார்குடி,
கோடை காலத்தில் குளிர்பான உற்பத்தி கூடங்கள் முடங்கி கிடப்பதால் வருவாய்க்கு வழியின்றி தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
கோடை காலத்தில் ஊரடங்கு
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் குளிர்பானங்களின் தேவை அதிகமாக இருக்கும். கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி குடிப்பார்கள். மார்ச் மாத இறுதியில் இருந்தே சாலையோரங்களில் புதிய குளிர்பான கடைகளை காணலாம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா எனும் கொடி நோய் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, குளிர்பான உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைத்து விட்டது. ஊரடங்கால் குளிர்பான உற்பத்தி கூடங்கள் முடங்கி கிடக்கின்றன. உற்பத்தி மற்றும் விற்பனை அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் குளிர்பான உற்பத்தி கூடங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து குளிர்பான உற்பத்தியாளர்கள் கூறிய தாவது:-
வருவாய் இழப்பு
மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட குளிர்பான உற்பத்தி கூடங்கள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த குளிர்பான உற்பத்தி கூடங்கள் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தை நம்பி தான் செயல்பட்டு வருகின்றன.
இந்த 3 மாதங்களில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் ஆண்டின் மற்ற மாதங்களில் செலவுகளை சமாளித்து வருகிறோம். இந்நிலையில் வருவாய் ஈட்டி தரும் காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம்.
ஊதியம் அளிக்க முடியாத நிலை
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை ஓரளவுக்கு கொடுத்து சமாளிக்கிறோம். இதேநிலை தொடரும்போது தொழிலாளர்களுக்கும் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்படும்.
ஊரடங்கு காலம் முடிவடைந்த பின்னர் வட்டியில்லா வங்கி கடன் கிடைத்தால் தொழிலை மீட்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story