கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் - கலெக்டர் வழங்கினார்
பரமக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு கபசுர குடிநீரை கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார்.
பரமக்குடி,
பரமக்குடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார துறை துணை இயக்குனர் இந்திரா, போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை உள்பட அனைத்து துறைகள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா பரவும் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசின் அனைத்து அறிவுரைகளையும் மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் வரும் சமயங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story