டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது போலீஸ் அதிகாரி தகவல்
டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெண் டாக்டர்
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டரை போல பல இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு மூலம் பெண்களை மயக்கி தன்னுடைய வலையில் வீழ்த்துவது, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் நெருக்கமாக இருப்பது, அந்த ஆபாச காட்சியை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட லீலைகளில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் முதல் வெளி மாவட்டத்தில் உள்ள வசதியான குடும்பத்தை சேர்ந்த பல பெண்களிடம் அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆபாச வீடியோக்கள்
இதை தொடர்ந்து காசி பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செல்போனை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது காசி பல பெண்களுடன் சேர்ந்து எடுத்த ஆபாச புகைப்படங்கள் செல்போனில் ஏராளமாக இருந்தன. மேலும் வீடியோக்களும் இருந்ததால் போலீசார் திகைத்து போனார்கள். அந்த அளவுக்கு காசியின் லீலைகள் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. லேப்-டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பொதுவாக காம லீலைகளில் ஈடுபடுபவர்கள், தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இதனால் அந்த ஹார்ட் டிஸ்கை ஆய்வு செய்தால், அதில் காசியின் பல அந்தரங்க விவரம் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய படங்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பெண் என்ஜினீயர்
இதற்கிடையே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம், அவரை பற்றிய ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயர் ஒருவர் நேற்று முன்தினம் காசி மீது புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை காசி அபகரித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதன்பேரில் காசி மீது போலீஸ் தரப்பில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் காசி நண்பர்கள் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குண்டர் சட்டம்
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள காசி மீது பெண் என்ஜினீயர் ஒருவர் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும். காசி நிறைய குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசியுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story