களக்காடு அருகே பரபரப்பு 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்


களக்காடு அருகே பரபரப்பு 2 பேரை கடித்து குதறிய கரடி மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 28 April 2020 6:39 AM IST (Updated: 28 April 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே 2 பேரை கரடி கடித்து குதறியது.

களக்காடு, 

களக்காடு அருகே 2 பேரை கரடி கடித்து குதறியது.

கரடி அட்டகாசம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பொத்தையில் கடந்த சில மாதங்களாக 4 கரடிகள் சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளத்தில் நேற்று காலை கரடி புகுந்தது. இதைப்பார்த்த சிலர் அதனை அங்கிருந்து விரட்டினர். அதன் பின்னர் கரடி அங்குள்ள தெருக்களில் சுற்றி வந்தது. கரடியை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இளைஞர்கள் திரண்டு கரடியை விரட்டினர்.

தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் வனச்சரகர்கள் புகழேந்தி, பாலாஜி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடி தெற்கு அப்பர்குளத்தில் இருந்து, வடக்கு அப்பர்குளம், நடுவகுளம், செட்டிகுளம் வழியாக சுமார் 10 கி.மீ.தூரம் ஓடிக் கொண்டே இருந்தது. வனத்துறையினரும், இளைஞர்களும் கரடியை பிடிக்க துரத்தி சென்றனர்.

2 பேர் படுகாயம்

தப்பிய கரடி செட்டிகுளம் வயல்வெளிக்குள் நுழைந்தது. கரடி வயலுக்குள் ஓடி வருவதை பார்த்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் ஓட்டம் பிடித்தனர். அப்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேல உப்பூரணியை சேர்ந்த விவசாயி செல்வராஜை (வயது 60) கரடி கடித்து குதறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல் வேட்டை தடுப்பு காவலர் சுந்தரும், கரடி கடித்ததில் படுகாயம் அடைந்தார். அதனைதொடர்ந்து கரடி வாழை தோட்டத்துக்குள் சென்று பதுங்கி கொண்டது.

நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் 3 முறை துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். இதனால் கரடி மயங்கி விழுந்தது. மயங்கிய கரடியை வனத்துறையினர் மீட்டு அதனை களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட கரடி 7 வயது ஆண் கரடி ஆகும். காலை 6 மணிக்கு கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 4 மணிக்கு கரடியை வனத்துறையினர் பிடித்தனர். கரடி அட்டகாசத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story