கள்ளிக்குடியில் மூடப்பட்ட வணிக வளாகம் முன்பு காய்கறிகளுடன் விவசாயிகள் சந்தை அமைத்ததால் பரபரப்பு
கள்ளிக்குடியில் மூடப்பட்ட வணிக வளாகம் முன்பு விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுடன் திடீரென சந்தை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
கள்ளிக்குடியில் மூடப்பட்ட வணிக வளாகம் முன்பு விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுடன் திடீரென சந்தை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடைகளை அகற்றக்கோரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்தது.
ரூ.65 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம்
திருச்சி மாநகரில் செயல்படும் காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றும் வகையில், திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் கள்ளிக்குடியில் ரூ.65 கோடியில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனைக்கான ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்ததால் மூடப்பட்டது. தற்போது விவசாயிகள் விளைவித்த பொருட்களின் சேமிப்பு கிடங்காகவும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகளாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளிக்குடி வணிக வளாகத்தில் விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை விற்பதற்கு அனுமதி கேட்டு திருச்சி மனிதவளர் சங்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனுவுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.
20 கடைகள் அமைப்பு
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு கள்ளிக்குடி வணிக வளாகத்தின் முன்பு சாலையோரம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளுடன் அங்கு வந்து சந்தை அமைத்து விற்பனையை தொடங்கினர். மொத்தம் 20 கடைகள் அமைக்கப்பட்டன.
காய்கறிகள் விற்பனையை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். காய்கறிகள் சந்தை மதிப்பை விட மிகவும் குறைவான விலைக்கே விற்கப்பட்டன. குறிப்பாக 2 கிலோ நாட்டு தக்காளி ரூ.15-க்கு விற்பனை ஆனது. அதுபோல நல்ல தரமான தேங்காய் ரூ.15, ரூ.20, ரூ.25 என்ற விலைக்கு விற்பனை ஆனது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது. அதுபோல கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.100-க்கும் விற்பனை ஆனது. திடீர் சந்தை குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிக்குடி, மணிகண்டம், ஆலம்பட்டி, சேதுராப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
மேலும் அங்கு அனுமதியின்றி திடீர் சந்தை அமைக்கப்பட்டதை அறிந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், வேளாண்துறை துணை இயக்குனர் (வணிகம்) முருகன், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சுகுமார், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்(நவல்பட்டு) ஆகியோர் அனுமதி இன்றி கடை அமைக்கக்கூடாது என்றும், வணிக வளாகம் கொரோனா சிறப்பு வார்டாக செயல்பட்டு வருவதால், இந்த வேளையில் இங்கு வேண்டாம் எனவும், கடைகளை அகற்றுங்கள் என கு.ப.கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு அவர், “இந்த வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட 42 கடைகள் கடைசி பகுதியில் உள்ளது. அவற்றை முன்பகுதிக்கு ஒதுக்கித்தர சொல்லுங்கள். அல்லது அவர்களுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி கொடுங்கள், என்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதே இடத்தில் சந்தை அமைக்க அதிகாரிகள் அனுமதிப்பார்களா? அல்லது மாற்று இடத்தில் நடக்குமா? என்ற குழப்பம் விவசாயிகளுக்கும் தீரவில்லை.
கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகம் முன்பு விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்த தகவல் அறிந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் காலை 8.30 மணிக்கு காய்கறிகள் வாங்க வந்தனர். அதற்குள் தக்காளி, பெரிய வெங்காயம், புடலை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்று தீர்ந்து விட்டது. இதனால், காய்கறிகள் வாங்க பைகளுடன் வந்த பெண்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Related Tags :
Next Story