மண்ணச்சநல்லூர், கல்லக்குடி, துவரங்குறிச்சி பகுதிகளில் சாராயம் காய்ச்சி, விற்ற 5 பேர் கைது குடிக்க வந்தவரும் சிக்கினார்
மண்ணச்சநல்லூர், கல்லக்குடி பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சாராயம் குடிக்க வந்தவரும் சிக்கினார்.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர், கல்லக்குடி பகுதிகளில் சாராயம் காய்ச்சிய, விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சாராயம் குடிக்க வந்தவரும் சிக்கினார்.
அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த பச்சை வெளிப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(வயது 35), அவருடைய தம்பி சபா (30) ஆகியோர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் குடிக்க வந்த மூவராயன்பாளையம் சோழா பண்ணையை சேர்ந்த காசிலிங்கம் (34) என்பவரும் சிக்கினார். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லக்குடி
இதேபோல, கல்லக்குடியை அடுத்த மால்வாய் சாதூர்பாகம் கிராமத்தில் லால்குடி இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மால்வாய் சாதுர்பாகம் கிராமத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். அவர்களில் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள் (55), தங்கராஜ் (55) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சசிகுமார் என்பவரை தேடி வருகின்றனர். 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி
துவரங்குறிச்சி அருகே உள்ள நைனாம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்ற நைனாபட்டியை சேர்ந்த மூக்கன்(47) என்பவரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய லட்சுமணன் மற்றும் பாலு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் போலீசாருடன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது சிறுநாவலூரைச் சேர்ந்த அசோக்குமார் (28) மோட்டார் சைக்கிளில் ஒரு கேனில் கள் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
82 பேர்
திருச்சி மாவட்டத்தில் இதுவரை நடந்த சாராய வேட்டையின்போது மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 534 லிட்டர் சாராயம், 2,086 லிட்டர் சாராய ஊறல், 117 லிட்டர் கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 23 இருசக்கர வாகனங்களும், 3 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.
Related Tags :
Next Story