சொந்த ஊர் செல்ல முடியாமல் சாலையோரம் தஞ்சம் அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள்
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் திருச்சியில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திருச்சி,
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் திருச்சியில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சாலையோரம் தவிப்பு
கொரோனா ஊரடங்கால் பஸ், ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அடியோடு ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், திருச்சி மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. மேலும் பல தன்னார்வ அமைப்புகளும் உதவி வருகின்றன.
இந்தநிலையில் திருச்சியில் கட்டிட தொழில் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்த வெளிமாநில தொழிலாளர்கள் சிலர், ஊரடங்கால் வேலை செய்த இடங்களில் இருந்தும், கடைகளில் இருந்தும் உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் எங்கே செல்வது? என்று தெரியாமல் சாலையோரம் அடைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரையின் கீழ் தஞ்சம் அடைந்து தவித்து வருகிறார்கள். தினமும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவை சாப்பிடுவது, தூங்குவது, நாளிதழ்கள் படிப்பது, செல்போன்களில் மூழ்கி பொழுதை கழிப்பது என்று ‘சும்மா’ இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தஞ்சம்
திருச்சி அம்மா மண்டபம் அருகே மாம்பழச்சாலை ரோட்டில் ஒரு கடையின் முன்பு கர்நாடக மாநிலம் சுமோகாவை சேர்ந்த ஆனந்தகுமார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களில் ஆனந்தகுமார் கூறுகையில், ‘திருச்சியில் உள்ள பலகார கடை ஒன்றில் நான் உள்பட 8 பேர் வேலை பார்த்தோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. சில நாட்கள் சக ஊழியர்களுடன் உரிமையாளர் ஒதுக்கி தந்த அறையில் தங்கினோம். ஆனால், போலீசார் கெடுபிடியால் அவர்களை தங்க அனுமதிக்ககூடாது என தெரிவித்ததால் உரிமையாளர் எங்களையெல்லாம் அறையை காலி செய்ய சொல்லி விட்டார். 30 நாட்களுக்கும் மேலாக ஊருக்கு செல்ல முடியாமல் வீடற்றவர்களைபோல நாங்களும் தவித்து வருகிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story