கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மொத்த வியாபாரிகள் காய்கறி கடை அமைக்க அனுமதி விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மொத்த வியாபாரிகள் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அங்கு விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மொத்த வியாபாரிகள் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அங்கு விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கரூர் பழைய பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்த உழவர்சந்தை மூடப்பட்டது. மேலும், மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில், கரூர் திருவள்ளுவர் மைதானத்திலும், கரூர் பஸ் நிலையத்திலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் மைதானத்தில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக வந்து பொதுமக்கள் காய்கறிகளை வாங்கியதால் நோய் தொற்று ஏற்படும் என கருதி திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
மீண்டும் கடைகள் திறக்க அனுமதி
அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கரூர் பஸ் நிலையத்தில் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மொத்த வியாபாரிகள் மட்டும் வந்து விற்பனை செய்யும் படியும், சில்லரை வியாபாரிகள் அவர்களிடம் காய்கறிகளை வாங்கி சென்று பிற பகுதிகளில் வியாபாரம் செய்யும் படியும் கடைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில்லரை வியாபாரிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்களை வாங்க அங்கு கூடியதால் கரூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மொத்த வியாபார கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் மொத்த வியாபாரிகள் தவித்து வந்தனர்.
இதனையடுத்து மீண்டும் திருவள்ளுவர் மைதானத்தில் மொத்த வியாபாரிகள் மட்டும் வந்து மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வகையிலும், அவர்களிடம் சில்லரை வியாபாரிகள் அந்த நேரத்தில் வந்து வேண்டிய காய்கறிகளை வாங்கி கொள்ளும் வகையில் நேற்று முதல் கடைகள் திறக்கப்பட்டது.
விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு
முன்னதாக நேற்று முதல் நாள் என்பதால் திருவள்ளுவர் மைதானத்தின் முன்பு கடைகள் அமைக்க வேண்டும் என கூறி பலர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்தவர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை வியாபாரம் செய்யலாம் என்பதால் அங்கு மின் விளக்குகள் அமைத்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
2 நாட்கள் கிடையாது
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 60 கடைகள் அமைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 30 மொத்த வியாபாரிகள் கடைகளும், 2 மகளிர் சுய உதவி குழுக்களின் கடைகளும், எஞ்சிய கடைகள் விவசாயிகளின் கடைகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயிகள் கடைகள் அமைக்க தோட்டக்கலை துறையிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ உரிய சான்று பெற்று வர வேண்டும். வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி விற்பனை நடைபெறாது என்றனர்.
Related Tags :
Next Story