கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் ஆய்வு


கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2020 9:58 AM IST (Updated: 28 April 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காந்திநகர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

அவர்கள், பழுதடைந்த வீட்டுக்கூரையை சீரமைத்துத் தர வேண்டும், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்குகள் உள்பட பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் எனக் கூறினர். அதற்கு கலெக்டர், அங்கிருந்த அதிகாரிகளிடம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பரதராமி மற்றும் சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடியை ஆய்வு செய்தனர். பின்னர் பரதராமி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். வெளியூரில் இருந்து வருவோரை மருத்துவப் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், தாசில்தார்கள் வத்சலா, சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, வட்டார மருத்துவ அலுவலர் விமல், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், வனவர் பிரகாஷ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு அரிதாஸ் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story