ஊரடங்கால் பாதிப்பு: கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நொறுங்கிய பரிதாபம்
ஊரடங்கால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நொறுங்கிப்போயிருக்கிறது.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நொறுங்கிப்போயிருக்கிறது.
கல் பட்டறைகள்
கொரோனா வைரசால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையையும் மாற்றி விட்டது. அன்றாடம் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களின் நிலை முற்றிலும் பாதிப்புக்குள்ளானது. ஊரடங்கு காலக்கட்டம் ஒரு மாதத்தை தாண்டி விட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமோ? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதேநேரத்தில் உயிர்கொல்லி வைரசிடம் இருந்து மக்களை முழுமையாக காப்பாற்ற அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் பட்டறைகள் ஏராளமாக உள்ளன. அதாவது மலையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பாறாங்கற்களை வாங்கி அதனை உடைத்து செதுக்கி, கம்பி வேலி அமைக்க பயன்படும் கற்களாவும், குறிப்பிட்ட உயர அளவு கொண்ட கற்களாகவும், அமரக்கூடிய இருக்கைகள் போலவும் மாற்றி விற்கும் பட்டறைகள் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
தொழிலாளர்கள் தவிப்பு
ஊரடங்கினால் மாவட்டத்தில் கல் பட்டறைகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். தினக்கூலி மற்றும் வாரக்கூலியை அடிப்படையாக கொண்ட இத்தொழிலாளர்களின் குடும்பங்கள் தற்போது கண்ணீரில் தத்தளித்து வருவதாக பட்டறை நடத்தி வருபவர்கள் தெரிவித்தனர். அரசு வழங்கிய கொரோனா நிவாரணம் கிடைத்தாலும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் கூறினர்.
அடப்பங்கார சத்திரம் பகுதியில் கல் பட்டறை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், எனது பட்டறையில் 7 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வருமானம் எதுவும் இல்லாததால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் நிலை பரிதாபமாகி உள்ளது. எனது பட்டறையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு சில உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story