மதுக்கடைகள் மூடல்: சாராய தயாரிப்பை தடுக்க போலீசார் தீவிரம் தொடரும் கைது, ஊறல் அழிப்பு நடவடிக்கை


மதுக்கடைகள் மூடல்: சாராய தயாரிப்பை தடுக்க போலீசார் தீவிரம் தொடரும் கைது, ஊறல் அழிப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 28 April 2020 12:16 PM IST (Updated: 28 April 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகள் மூடலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

மதுக்கடைகள் மூடலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் மதுப்பழக்கத்தை கைவிட இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டனர். அதேநேரத்தில் சிலர் மதுவுக்கு பதிலாக சாராயத்தை தேடத்தொடங்கினர். இதனை பயன்படுத்தி சாராயம் காய்ச்சுவதை சிலர் கையில் எடுத்தனர்.

ஊரடங்கு காலக்கட்டத்தை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலர் சாராய தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை போலீசார் மோப்பம் பிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும், சாராய ஊறல்களை அழித்தும் வருகின்றனர்.

10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சுகுணா (புதுக்கோட்டை), லதா (ஆலங்குடி) மற்றும் அந்தந்த உள்ளூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கின்றனர். இதேபோல சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,483 லிட்டர் சாராயமும், 10 ஆயிரத்து 325 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதேபோல 5,137 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் கைது

இதற்கிடையில் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை அருகே அரவம்பட்டியில் சாராயம் காய்ச்சியதில் தப்பியோடிய ராஜா, ஸ்டாலின் ஆகிய 2 பேரை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல கே.ராசிமங்கலத்தில் 300 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி ஒருவரை கைது செய்தனர்.

Next Story