ஓட்டப்பிடாரத்தில் ஆட்டோ டிரைவர், முதியோர்களுக்கு நிவாரண உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
ஓட்டப்பிடாரத்தில் ஆட்டோ டிரைவர், முதியோர்களுக்கு நிவாரண உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தூய்மை பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்பட மொத்தம் 650 பேருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டியில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் ரகு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி அழகிரி என்ற கோபி, ஓட்டப்பிடாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பெரியமோகன், புளியம்பட்டி அந்தோணியார்கோவில் பங்குதந்தை பிரான்சிஸ், யூனியன் ஆணையாளர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ரேஷன் பொருட்கள்
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் நிவாரணைத்தொகை தலா ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாத ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
மே மாத ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
3,229 பேருக்கு பரிசோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 229 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கயத்தாறு
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கடம்பூர் சிதம்பராபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசுவரன், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் ராஜவேல், இணை செயலாளர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், அங்கு பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
Related Tags :
Next Story