காங்கேயம் துணை மின்நிலையத்தில் ‘தீ’ - மின்மாற்றிகள் சேதம்


காங்கேயம் துணை மின்நிலையத்தில் ‘தீ’ - மின்மாற்றிகள் சேதம்
x
தினத்தந்தி 29 April 2020 4:30 AM IST (Updated: 29 April 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் துணை மின் நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின்மாற்றிகள் சேதம் அடைந்தன.

காங்கேயம்,

காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் காங்கேயம் நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென பெரிய சத்தம் கேட்டது. அப்போது மின் நிலையத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்த மின்மாற்றின் அடியில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

அந்த தீ மளமளவென எரிந்து மின் நிலையத்தில் வேறு பகுதிகளுக்கும் பரவியது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் புகை அதிகமாகி அருகில் உள்ள சாலை முழுவதும் பரவியது.இதனால் அந்த வழியாக சிறிது நேரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ½ மணிநேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த தீவிபத்து காரணமாக அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இந்த தீவிபத்தில் அங்கிருந்த மின் மாற்றிகள் பலத்த சேதமடைந்தது. மேலும் தீவிபத்து ஏற்பட்டவுடன் காங்கேயம் நகரப்பகுதி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு வெகு நேரமாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது.இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மின் நிலையத்தில் இருந்த மின் வயர்கள் உரசியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story