அகவிலைப்படி உயர்வு ரத்து நியாயம் அல்ல - ஆசிரியர் சங்கம் கண்டனம்


அகவிலைப்படி உயர்வு ரத்து நியாயம் அல்ல - ஆசிரியர் சங்கம் கண்டனம்
x
தினத்தந்தி 29 April 2020 4:30 AM IST (Updated: 29 April 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, 

கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டதற்கும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதற்கும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு மத்திய அரசு, விலைவாசி புள்ளிகளின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குகிறது.

தற்போது நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல.

இந்திய விடுதலைக்கு பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, பஞ்சபடியை கணக்கிட்டு 1960-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கணக்கில் கொண்டு விலைவாசி உயர்வு 100 புள்ளிகள் என நிர்ணயம் செய்து அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள இந்த செயலானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஒருமாத காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அகவிலைப்படி உயர்வை ரத்து செய்ய கூடிய அளவிற்கு நிலைமை உருவாகி உள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் தன்மையின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story