செங்கல்பட்டு மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 12 பேருக்கு கொரோனா உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அதே தெருவில் மேலும் 3 ஆண்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 1½ வயது பெண் குழந்தையும், போலீஸ்காரரின் மனைவியும் அடங்குவார்கள். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 8 வயது சிறுவனுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. சிறுவன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிறுவன் சிகிச்சை பெற்று வந்த சேலையூர் கேம்ப் ரோட்டிலுள்ள பெதஸ்தா ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அந்த ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக யாருக்கும் சிகிச்சை அளிக்க கூடாது என தாசில்தார் சரவணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் உத்தரவின்பேரில் அங்கு மருத்துவ பணிகள் நிறுத்தப்பட்டது.
அதேபோல் கீழ்கட்டளையை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ஆட்டோவில் வடசென்னை பகுதிக்கு சென்று வந்தார். அதில் அவர் கொரோனா பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் மாங்காட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் உறுதியானது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவரது கடைக்கு வந்து சென்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள 6 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு மாங்காடு பேரூராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோயம்பேடு மற்றும் சென்னைக்கு சென்று வருபவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பதால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயில்களை மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சென்னையில் இருந்து மாங்காடு மற்றும் குன்றத்தூர் வழியாக வரும் எல்லைகளான மாங்காடு, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், குன்றத்தூர் நான்கு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 53 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில் நேற்றுமுன்தினம் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 27 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story