அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற பொதுமக்கள் முயற்சி
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவதி
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் நாகர்கோவில் டென்னிசன் தெரு பகுதியை சேர்ந்தவர். அவர் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வெளியே வரவும், வெளியில் இருந்து அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், கடந்த சில நாட்களுக்கு முன் முற்றிலும் குணமாகி வீடு திரும்பினார். ஆனாலும் அந்த பகுதியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை.
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த சுமார் 35 குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட் கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததாகவும், அங்கு வசிப்பவர்களுக்கு யாராவது அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்தாலும் அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்ற விவரங்களை போலீசார் சேகரிப்பதால் அந்த பகுதிக்கு வெளியாட்கள் வரவே அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர், வீட்டின் மாடியில் அடிக் கடி வந்து நிற்பதால், கொரோனா தங்களுக்கும் பரவுமோ? என்ற அச்சமும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இந்தநிலையில் நேற்று காலை தடை செய்யப்பட்ட அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், நாங்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறோம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் வந்து, அந்தப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் தாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் செல்ல வேண்டும் எனவே தடையை அகற்றுமாறு கூறி வாக்குவாதம் செய்ததோடு தடையை மீறி வெளியேற முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
சமாதானம்
இதையறிந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. விரைந்து வந்து, அந்த பகுதி மக்களுடன் பேசி அவர்களை சமாதானப்படுத்தினார். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் களை தானே தருவதாக கூறினார். அதன்படி 35 குடும்பத்தினருக்கும் தலா 5 கிலோ அரிசி, ரூ.150 மதிப்பிலான காய்கறிகள், ரூ.300 மதிப்பிலான மளிகைப் பொருட்கள், 150 முட்டைகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கினார். இந்த பகுதியில் அரசு தடையை அகற்றும்வரை பொறுமையாக அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்றும் அவர்களிடம் சுரேஷ்ராஜன் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு அல்லது மாநகராட்சிதான் அத்தியாவசிய பொருட் களை வழங்க வேண்டும். கடந்த 28 நாட்களாக வீடுகளிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது சாப்பிட எதுவும் இல்லாததால் வெளியே வாங்க போய் இருக்கிறார்கள். அவர்களை போலீசார் தடுத்துள்ளனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 35 குடும்பத்தினருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும் நானே நேரில் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முட்டை ஆகியவற்றை வழங்கி இருக்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story