குமரியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்காணிப்பு அதிகாரி தகவல்


குமரியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 April 2020 6:30 AM IST (Updated: 29 April 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நோய் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறினார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நோய் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறினார்.

ஆய்வு கூட்டம்

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் குமரி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்துறை இயக்குனருமான கருணாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிவாரண நிதி

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி, ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பல்வேறு அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கும், மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டது போக மீதமுள்ளவர்களுக்கும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க மீன்வளத்துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், அனைத்து துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், முகக் கவசங்கள், கையுறை உள்ளிட்டவைகளையும் வழங்க வேண்டும்.

சோதனை சாவடிகள்

குமரி மாவட்டத்தில் உள்ள 40 சோதனை சாவடிகளிலும், எல்லைகளிலும், வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று நோயினால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கருணாகரன் கூறினார்.

அதிகாரிகள்

ஆய்வு கூட்டத்தில், இணை இயக்குனர் (மருத்துவம்) ஜாண் பிரிட்டோ, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜ், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன் (வேளாண்மை), கோட்டாட்சியர் மயில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story