கொரோனா பாதிப்பு குறைய மக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் மேலும் கூறியதாவது:-
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் சிகிச்சை முடிந்து வீடி திரும்பியுள்ளனர். ராஜபாளையத்தில் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும். மாவட்டத்தில் சமூக தொற்று மூலம் யாருக்கும் கொரோனா பரவவில்லை என அறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே தொற்று பரவியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக உள்ளது. தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிதாக அறியப்படவில்லை என்றால் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும். இதேபோல் 28 நாட்களுக்கு யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளை இயக்க அரசிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story