ஊரடங்கை உபயோகமாக மாற்றி சாதனை: கைவினை கலைஞராக மாறிய குமரி என்ஜினீயர்


ஊரடங்கை உபயோகமாக மாற்றி சாதனை: கைவினை கலைஞராக மாறிய குமரி என்ஜினீயர்
x
தினத்தந்தி 29 April 2020 6:07 AM IST (Updated: 29 April 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை உபயோகமாக மாற்றி சிரட்டையை கொண்டு ஏராளமான பொருட்களை தயார் செய்து கைவினை கலைஞராக மாறி சாதனை படைத்து இருக்கிறார் குமரியைச் சேர்ந்த என்ஜினீயர்.

கன்னியாகுமரி, 

ஊரடங்கை உபயோகமாக மாற்றி சிரட்டையை கொண்டு ஏராளமான பொருட்களை தயார் செய்து கைவினை கலைஞராக மாறி சாதனை படைத்து இருக்கிறார் குமரியைச் சேர்ந்த என்ஜினீயர்.

ஊரடங்கு

கொரோனா, இந்த கொலைகார நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்து மக்களும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் ஆண்களும், பெண்களும், செஸ், கேரம், பல்லாங்குழி, தாயம் போன்றவை விளையாடி பொழுதை கழிக்கின்றனர். இன்னும் சிலர் டி.வி.க்களில் சினிமா, செல்போன் எனவும், சிலர் புத்தகங்கள் வாசிப்பதிலும் பொழுதை போக்குகின்றனர்.

இதற்கு எல்லாம் ஒருபடி மேலே போய் ஊரடங்கை வித்தியாசமாக உபயோகப்படுத்தி இருக்கிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவர், அப்படி என்ன செய்து இருக்கிறார் என்று பார்த்தால், சிரட்டை என்று அழைக்கப்படும் கொட்டாங்கச்சியில் ஏராளமான பொருட்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ள அவரது பெயர் பிரகாஷ்.

குமரி மாவட்டம் மணிக்கட்டிபொட்டல் அருகே பெருங்குளம் பகுதியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார்.

கலை பொருட்கள்

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் வீட்டுக்குள்ளேயே இருந்த அவர், சிரட்டையில் பல்வேறு பொருட்களை உருவாக்க நினைத்தார். அதற்காக அவர் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் சிரட்டைகளை சேகரிக்க தொடங்கினார்.

அதன்மூலம் மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள், அலங்கார விளக்குகள், தண்ணீர் குடுவைகள், பிள்ளையார் சிலை, சாவிக்கொத்து, சமையல் கரண்டி, டீ கப் போன்ற வீட்டு உபயோகப்பொருட்கள், சுவர் அலங்கார பொருட்கள், ஜாடிகள் உள்பட 50 வகையான கலைப்பொருட்களை உருவாக்கி இருக்கிறார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பாராட்டினர்.

வடிவமைத்து விடுவேன்

இந்த சிந்தனை எப்படி வந்தது? என்பது குறித்தும், சிரட்டையில் கலை பொருட்களை வடிவமைத்தது குறித்தும் பிரகாஷ் கூறியதாவது:-

எனது தந்தை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் சரசுவதி. 2 அக்காள்கள், ஒரு அண்ணன் உள்ளனர். வீட்டில் கடைசி பிள்ளையான நான் என்ஜினீயரிங் படிப்பில் ஆட்டோமொபைல் முடித்து உள்ளேன். வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் கலை பொருட்களின் மீதான ஆர்வத்தால் வேலைக்கு செல்லவில்லை.

நான் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சிற்பங்களை பார்க்கும் போது, சிற்பியாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதேநேரத்தில் கையில் கிடைக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதனை ஏதாவது ஒரு உருவத்தில் வடிவமைத்து விடுவேன்.

சிரட்டை

எனவேதான் பள்ளி நாட்களில் எங்கு அறிவியல் கண்காட்சி இருந்தாலும் எனது பள்ளி சார்பில் நான் உருவாக்கிய பொருட்கள் கண்காட்சியில் நிச்சயம் வைக்கப்படும். இருந்தாலும் நான் என்ஜினீயரிங் படிக்கும் போது சிற்பி ஒருவரிடம் பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்தேன். அதன்பிறகு சிற்பக்கலை மீதான சிந்தனை எனக்கு அதிகமாகி விட்டது.

இதற்கிடையே தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். எப்படி பொழுதை கழிப்பது? என சிந்தனையில் இருந்தேன். பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளதால் அதற்கு மாற்றாக ஏதாவது ஒரு பொருளை உருவாக்கலாமே என அப்போதுதான் நினைத்தேன். அது இயற்கையாக கிடைக்கும் பொருளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனவும், எதன்மூலம் அந்த பொருட்களை செய்யலாம் என யோசனையில் இருந்த போது, எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த சிரட்டை.

கடன் உதவி

அதாவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத கொட்டாங்கச்சியை தேர்வு செய்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் கோப்பைகள், தண்ணீர் குவளைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் சிறியது முதல் பெரிய கரண்டிகள் போன்றவைகளை வடிவமைக்க தொடங்கினேன்.

அப்படி நான் உருவாக்கிய பொருட்களை என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் அதனை பயன்படுத்திவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டுவார்கள். இந்த பாராட்டுதான் என்னை மேலும் மேலும் ஏராளமான பொருட்களை உருவாக்க உரமாக இருந்தது.

எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகமாக நடக்கிறது. கொட்டாங்கச்சி எனக்கு எளிதாக கிடைத்தன. அதனால் தேவையான கொட்டாங்கச்சிகளை தேர்வு செய்து அதன் மூலம் கலை பொருட்களை வடிவமைத்தேன். இன்னும் ஏராளமான பொருட்களை உருவாக்க ஆசைப்படுகிறேன். அதற்கு பண உதவி தேவைப்படுகிறது. என்னுடைய குடும்பம் ஏழ்மையில் உள்ளது. எனவே அரசு மானியத்தில் அரசு கடனுதவி செய்தால் எனது கலைத்திறனை வளர்க்க இன்னும் உதவியாக இருக்கும். எனது குடும்பமும் ஏழ்மையில் இருந்து விடுபடும்.

கின்னஸ் சாதனைக்கு முயற்சி

மத்திய அரசின் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் நான், இந்த கைவினை பொருட்களை உருவாக்குவதில், அதுவும் சிரட்டையில் இன்னும் ஏராளமான பொருட்களை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறேன். அதனையும் விரைவில் செய்து சாதித்து காட்டுவேன் என்கிறார் பிரகாஷ். நம்பிக்கையுடன்... அவர் சாதிக்க நாமும் பாராட்டுவோமாக!

Next Story