நாகர்கோவிலில் ஆலங்கட்டி மழை சிறுவர், சிறுமிகள் உற்சாகம்
நாகர்கோவிலில் நேற்று திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சிறுவர், சிறுமிகள் குதூகலம் அடைந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நேற்று திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சிறுவர், சிறுமிகள் குதூகலம் அடைந்தனர்.
ஆலங்கட்டி மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இடை, இடையே அவ்வப்போது மழை பெய்து பூமியையும் குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மதியத்துக்கு பிறகு இந்த நிலை மாறியது. திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது.
நாகர்கோவிலில் மதியம் 2 மணிக்கு சாரலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழையாக பெய்தது. இதனால் வீடுகளில் முடங்கி கிடந்த சிறுவர், சிறுமிகள் வீட்டின் வெளியே வந்து ஆலங்கட்டி மழையை ரசித்தனர். மேலும் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி ஆலங்கட்டி மழையில் குதூகலமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில இடங்களில் சிறுவர், சிறுமிகள் ஆலங்கட்டியை கைகளில் ஏந்திய காட்சியும் அரங்கேறியது.
சாலைகளில் வெள்ளம்
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பலத்த மழையால் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணி மேடை, சவேரியார் ஆலய சந்திப்பு, கம்பளம், செட்டிகுளம் சந்திப்பு மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதையும் காண முடிந்தது.
இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி மற்றும் கடலோர பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. அஞ்சுகிராமத்திலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மேற்கூரை இடிந்து விழுந்தது
பலத்த மழைக்கு நாகர்கோவில் வட்டவிளை காமராஜர் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 38) என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த அய்யப்பனின் 2 மகள்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகே தென்னை மரம் ஒன்று முறிந்து பழைய இரும்புக்கடை மீது விழுந்தது.
மின்னல் தாக்கியதில் தெள்ளாந்தி பஞ்சாயத்தில் முத்தம்மாள் என்பவருடைய வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. அதே சமயத்தில், 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி.க்கள். பழுதானது. மேலும் மிக்சி போன்ற சாதனங்களும் செயலிழந்தன.
Related Tags :
Next Story