நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு டாக்டர், செவிலியர்களுக்கு சிறப்பான உணவு- தங்கும் வசதி கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு சிறப்பான உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு சிறப்பான உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை மையம்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் 7 நாட்கள் பணி, 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு, 7 நாட்கள் ஓய்வு என்ற அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். பணியிலும், தனிமையிலும் இருக்கும் 14 நாட்களுக்கு அவர்களுக்கு உணவு வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும்போதும், அதில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்திலும் சிறப்பான முறையில் தங்கும் வசதியும், உணவும் அளித்திடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பான உணவு
இதையொட்டி அவர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் தங்கும் வசதியும், உணவும் வழங்கிட, கலெக்டர் தலைமையில் டீன் ரவிச்சந்திரன் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமண அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் கொண்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
நெல்லையில் உள்ள 2 சிறந்த சைவ உணவகங்கள் மற்றும் ஒரு சிறந்த அசைவ உணவகம் ஆகியவற்றில் இருந்து கொரோனா நோய் தடுப்பு வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் தனிமைப்படுத்தப்படும் பணியாளர்கள் அனைவருக்கும் 3 வேளையும் சிறப்பான உணவு பெற்று வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துரித நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் கடந்த 1 மாதமாக டாக்டர்களுக்கு தங்கும் இடமும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story