பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தில் மாநகராட்சி ஆணையாளர் ‘திடீர்’ ஆய்வு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
நெல்லை,
பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்பக்குளத்தில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
தெப்பக்குளம்
பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே திரிபுராந்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் தூர்ந்து போனதால் பல ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இதையொட்டி கோவில் பக்தர்கள், உழவாரப்பணி குழுவினர் சேர்ந்து குளத்தின் உள்பகுதியை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தொடர் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
ஆணையாளர் ஆய்வு
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று காலை சிவன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்தார். அவர் குளத்தின் உள்பகுதியில் இறங்கி குளம் மற்றும் சுற்றுப்புற அமைப்புகளை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் குளத்தின் உள்பகுதியில் கழிவு நீர் தேங்குவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், குளத்தின் உள்பகுதியில் கழிவுநீரை விடுவதை தடுத்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து இருப்பதால் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளம் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா? என்றும் பார்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளரிடம், “நாங்கள் இங்கு நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம். எனவே அனைவருக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று வலியுறுத்தினர். ஆனால் மாநகராட்சி சார்பில், தெப்பக்குளம் ஆக்கிரமிப்பை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story