நெல்லையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தூய்மை பணியாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை தினந்தோறும் நடத்த ஏற்பாடு


நெல்லையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தூய்மை பணியாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை தினந்தோறும் நடத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 29 April 2020 7:45 AM IST (Updated: 29 April 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை நடத்தப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையை தினமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூய்மை பணி

கொரோனா பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நெல்லைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களது வீடு அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் தினமும் குப்பை சேகரிப்பது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நெல்லை மாநகரம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை

இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், இவர்களது உடல் நலத்தை பேணும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்காக ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அந்த கருவிகள் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், அலகு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. நேற்று காலை வேலைக்கு வந்த தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதே போல் தினமும் ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story