கொடைக்கானலில் தொடர் மழை: பிரையண்ட் பூங்காவில் செடிகளிலே வீணாகும் வண்ண பூக்கள்


கொடைக்கானலில் தொடர் மழை: பிரையண்ட் பூங்காவில் செடிகளிலே வீணாகும் வண்ண பூக்கள்
x
தினத்தந்தி 29 April 2020 8:36 AM IST (Updated: 29 April 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடர் மழை காரணமாக செடிகளிலே வண்ண பூக்கள் வீணாகி வருகின்றன.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளுகுளு சீசன் நடைபெறும். அப்போது கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். மேலும் அவர்களது வருகையை கருத்தில் கொண்டு மலர் கண்காட்சியும் நடைபெறும். இதற்காக பிரையண்ட் பூங்காவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குளுகுளு சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கேலண்டுல்லா, பேன்சி, பெருவியன் லில்லி, அந்தூரியம் உள்பட பல்வேறு வகையான பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அவற்றில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை முடங்கியது. இதனால் பூச்செடிகளில் மொட்டுவிடும் பூக்களை, முளையிலேயே கிள்ளி விடும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் மே மாத மத்தியில் பூக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வீணாகும் பூக்கள்

இந்தநிலையில் பூங்காவில் பல வண்ண ரோஜா பூக்கள் பூத்து குலுங்கின. ஆனால் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக செடிகளிலே வண்ண பூக்கள் வீணாகி வருகின்றன. அத்துடன் பூக்கள் பலவும் அழுகி வருகின்றன. இதனால் பூங்கா ஊழியர்கள் கவலை அடைந்து வருகின்றனர். வழக்கமாக மே மாதம் மூன்றாவது வாரத்தில் கோடைவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படாத நிலையில் பூங்காவும் பராமரிப்பு இன்றியே உள்ளது. தற்போது பூத்துள்ள பூக்களை காண சுற்றுலா பயணிகள் யாரும் வருகை தராத காரணத்தால் ஏமாற்றம் அடைந்து பூக்கள் உதிர்ந்து வருவதாக தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story