திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கற்சிற்பக் கலைஞர்கள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கற்சிற்பக் கலைஞர்கள்
x
தினத்தந்தி 29 April 2020 4:28 AM GMT (Updated: 29 April 2020 4:28 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் சிற்ப கலைஞர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

ஆயக்கலைகள் 64-ல் சிற்பக் கலையும் ஒன்று. சிற்பக் கலையில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தில் கற்சிற்பங்கள் இல்லாத கோவில்களே இருக்காது. கற்சிற்பத்தில் கடவுளையும் வடித்து அழகு பார்ப்பான் தமிழன். சிலையை வடித்த சிற்பி மறைந்து விட்டாலும் அவன் வடித்த சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்து, அவன் புகழை பரப்பும்.

தமிழகத்தில் மாமல்லபுரம், திருமுருகன்பூண்டி, மயிலாடி, சுவாமிமலை, முடையூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் சிற்பக் கலைக்கு பெயர் பெற்றவை. திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரை அடுத்த முடையூரிலும், திருவண்ணாமலையில் உள்ள அடிஅண்ணாமலை பகுதியிலும் பல கற்சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தத் தொழிலில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, கருங்கற்கள் மூலமாகவும், மாவுகற்கள் மூலமாகவும் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. கருங்கற்கள் மூலம் செய்யப்படும் சிற்பங்கள் சிறியது ரூ.1000-ல் இருந்து தொடங்கி அளவுக்கு ஏற்பவும், அவர்கள் செய்யும் சிலையின் வடிவத்துக்கு ஏற்பவும் விலை நிர்ணயிக்கப்படும். அதேபோல் மாவு கற்களால் செய்யப்படும் சிற்பங்கள் சிறியது ரூ.50-ல் இருந்து தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் வரையும் சிலைகள் செய்து கொடுக்கப்படும்.

மாவுகற்கள் கிடைப்பதில் சிக்கல்

இந்தச் சிற்ப தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1,200 வரை கூலி வழங்கப்படும். இந்தக் கற்சிற்பிகளுக்கு தேவையான கருங்கற்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே கிடைக்கிறது. மாவுகற்கள் தண்டராம்பட்டு அருகே தாழாம் ஓடையில் இருந்து கிடைத்து வந்தது. தற்போது அதற்கு வனத்துறை தடை விதித்ததால் மாவுகற்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவுகற்கள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கற்சிற்ப தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வறுமையில் வடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த கற்சிற்பி சிவகுருநாதன் கூறியதாவது:-

சிதலமடைந்து காணப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கால் கற்சிற்ப தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சிற்ப பணிகளை செய்ய முடியவில்லை. இதனால் ஒவ்வொரு சிற்பக்கூடத்துக்கும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு மாத வேலை இழப்பால் ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பமும் சிரமப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கற்சிற்பங்கள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வந்தோம். நாங்கள் தயார் செய்துள்ள சிற்பங்களும் எங்களிடமே தேங்கி உள்ளன. தற்போது ஆர்டர்கள் இருந்தாலும் சிலைகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கற்சிற்பிகள் பலரிடம் மத்திய அரசின் அடையாள அட்டை உள்ளது. இது இருந்தும் எந்தவித பயனும் இல்லை. வறுமையில் வாடி வரும் கற்சிற்ப தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது திருவண்ணாமலையில் சிற்ப தொழில் ஸ்தம்பித்து, சிதலமடைந்து காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story