ஊரடங்கில் வீட்டில் சும்மா இருந்தால் என்ன செய்வது? வயிற்று பிழைப்புக்காக முக கவசங்களை விற்கும் தொழிலாளர்கள்
ஊரடங்கில் வீட்டில் சும்மா இருந்தால் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வது? என முக கவச விற்பனையில் தொழிலாளர்கள் பலர் இறங்கி விட்டனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கில் வீட்டில் சும்மா இருந்தால் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வது? என முக கவச விற்பனையில் தொழிலாளர்கள் பலர் இறங்கி விட்டனர்.
முக கவசம் விற்பனை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பலர் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதில் கூலித்தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் பலரது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
இந்தநிலையில் வயிற்று பிழைப்புக்காக சிலர் முக கவச விற்பனையில் களமிறங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்ள வழிமுறைகளில் ஒன்று முக கவசம் அணிவதாகும். முன்பு மருந்துகடைகளில் மட்டுமே விற்று வந்த முக கவசத்தை, தேவை அதிகரித்த பின் சிலர் அதனை வாங்கி சாலையோரம் விற்க தொடங்கினர். மகளிர் சுய உதவிக்குழுவினரும் வீடுகளில் முக கவசங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனால் முக கவசம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
தையல் தொழிலாளி
புதுக்கோட்டையில் டவுன் பகுதியில் ஆங்காங்கே முக கவசம் விற்பனையில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன் வேறு, வேறு வேலை பார்த்தவர்கள் ஆவர். இதில் சிலர் வீடுகளில் தாங்களே முக கவசங்களை தயாரித்து விற்று வருகின்றனர். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் நேரத்தில் மட்டும் முக கவசங்களை விற்று வருகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை கோர்ட்டு அருகே முக கவசம் விற்ற ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தையல் தொழிலாளி. ஊரடங்கினால் வேலை எதுவும் இல்லாததால் வீட்டில் சும்மா இருந்து வந்தேன். இதனால் வருமானம் எதுவுமின்றி தவித்து வந்தேன். வீட்டில் குடும்பத்தில் அன்றாட செலவுக்கு பணம் தேவைப்பட்டது. இதற்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.
குழந்தைகளுக்கு திண்பண்டங்கள்
தையல் தொழில் தெரியும் என்பதால் முக கவசங்களை நானே தயாரித்து விற்க திட்டமிட்டேன். பருத்தி துணிகளில் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். கடந்த சில நாட்களாக பகல் 1 மணி வரை முக கவசங்களை விற்று விட்டு வீட்டிற்கு திரும்பி விடுவேன்.
ஒரு முக கவசத்தை ரூ.8 முதல் ரூ.20 வரை விற்கிறேன். அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் வீட்டிற்கு தேவையான பால், காய்கறி, குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் இவற்றை வாங்கி செல்வேன். தையல் தொழிலில் நிலையான வருமானம் இருந்தது. தற்போது இந்த தொழிலில் வருமானத்தை அதிகமாக எதிர்பார்க்க முடியாது. ஏதோ கொஞ்சம் கைச்செலவுக்கு வியாபாரம் நடக்கிறது. வீட்டில் சும்மா இருந்தால் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வது?
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story