குன்னம் பகுதியில் மக்காச்சோளம் விலை குறைவதால் விவசாயிகள் கவலை வீடுகளில் இருப்பு வைக்கும் அவலம்


குன்னம் பகுதியில் மக்காச்சோளம் விலை குறைவதால் விவசாயிகள் கவலை வீடுகளில் இருப்பு வைக்கும் அவலம்
x
தினத்தந்தி 29 April 2020 11:01 AM IST (Updated: 29 April 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் பகுதியில் மக்காச்சோளம் விலை குறைவதால் அவற்றை வீடுகளில் இருப்பு வைத்து விலை ஏற்றத்திற்காக விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குன்னம், 

குன்னம் பகுதியில் மக்காச்சோளம் விலை குறைவதால் அவற்றை வீடுகளில் இருப்பு வைத்து விலை ஏற்றத்திற்காக விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மக்காச்சோளம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மக்காச்சோளம் பெரிய நோய்களால் பாதிக்கப்படாமல் அதிக விளைச்சல் அடைந்து விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது.

இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் தற்போது மக்காச்சோளம், தங்கம் விலை போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விலை தினமும் சரிந்து கொண்டு இறங்குமுகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் வருவாய் இன்றி கவலை அடைந்து உள்ளனர்.

கொள்முதல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் ஆண்டுதோறும் முனைப்பாகவே உள்ளனர். இந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளனர். இந்த ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரிலும், குன்னம் பகுதியில் 16 ஆயிரம் ஹெக்டேரிலும் விவசாயிகள் மக்காசோளத்தை சாகுபடி செய்தனர்.

கடந்த வாரம் குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,850 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையான மக்காச்சோளம், தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600-க்கு விலை சரிந்துள்ளது. தொடர்ந்து விலை சரிந்து தற்போது ரூ.1,400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வருவாய் இழந்து...

அறுவடைக்கு எந்திரம் வந்ததால் அறுவடை செலவு விவசாயிகளுக்கு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் விளைச்சல் நன்றாக இருந்தாலும் விலை சரிவால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். இதனால் பரவாய், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட குன்னம் பகுதி விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் அறுவடை செய்த மக்காச்சோளத்தை வீட்டிலேயே மூட்டை மூட்டையாக இருப்பு வைத்து உள்ளனர். கொரோனா ஊரடங்கால் விலை போகாத மக்காச்சோளத்தால் வருவாய் இழந்து தவித்து வருகின்றன.

விவசாயிகள் பாதிப்பு

இதற்கு முக்கிய காரணமாக கொரோனா ஊரடங்கு மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மக்காச்சோளத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து எடுக்கவேண்டும் எனவும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தரமற்ற மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதால், விலை குறைந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நாமக்கல் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதி கோழி பண்ணை உரிமையாளர்கள் மக்காச்சோளத்திற்கு உரிய விலை கொடுத்து வாங்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். குன்னம் பகுதியில் கடந்த ஆண்டு விவசாயிகள் மக்காச்சோளம் விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது நடப்பு பருவத்தில் மக்காச்சோளம் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பாதிக்கப்பட்டு கவலை அடைந்து வருகின்றனர்.

Next Story