நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் சேவை தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவசர சிகிச்சைகளுக்காக உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய நவீன புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவசர சிகிச்சைகளுக்காக உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய நவீன புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைகளுக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, அரியலூர் போலீஸ் நிலையம், விளாங்குடி, விக்கிரமங்கலம், ஆண்டிமடம், செந்துறை, உடையார்பாளையம், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் 14, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் சிகிச்சை வசதிகள் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் என ஆகமொத்தம் 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நமது மாவட்டத்தில் விபத்து, பிரசவம் மற்றும் இதர அவசர உதவிகளுக்கு மக்கள் பயன்படுத்தும் விதமாக இயக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து செல்வதற்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகளை அழைத்து செல்வதற்கும் வசதியாக நவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட நவீன ஆம்புலன்ஸ் வாகனம் இன்று (அதாவது நேற்று) முதல் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு, அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது என்றார். இதில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story