பால்கனியில் இருந்து மக்களிடம் பேசக்கூடியவர், கமல்ஹாசன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் தாக்கு
பால்கனியில் இருந்து மக்களிடம் பேசக்கூடியவர் கமல்ஹாசன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக தாக்கி பேசினார்.
கயத்தாறு,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தொற்றை தடுக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினமும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கைகளை பெற்று தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து சுய ஊரடங்கை கடைபிடித்தால், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி உருவாகும்.
கமல்ஹாசனுக்கு கண்டனம்
நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்று தெரியவில்லை. அவர் சினிமா வசனம் போன்று பேசி வருகிறார். உலகமே கண்டிராத பேரிடரால் அனைத்து நாடுகளிலும் பொதுமக்கள் மடிந்து வருகின்றனர். 2-ம் உலகப்போரை விட பேரிழப்பை ஏற்படுத்தக்கூடியதும், நம் முன்னோர்களும் கண்டிராத கொடிய கொரோனா வைரசால் வல்லரசு நாடுகளிலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு பகலாக பணியாற்றி வருகிறார். இதனால் அவரை ஏ.எம்., பி.எம். பாராமல் பணியாற்றும் சி.எம். என்று பொதுமக்கள், நல்ல உள்ளங்கள் பாராட்டி வருகின்றனர்.
பால்கனியில் இருந்து பேசக்கூடியவர்
கொரோனா தொற்று பரவுதலை தடுக்க அரசு முழுவீச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி துறையினர், போலீசார் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிதுநேரத்திலேயே பணிக்கு வந்த துப்புரவு பணியாளரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார். மேலும் அவர், கொரோனா வைரசால் ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்று உழைத்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் பால்கனியில் இருந்து மக்களை பார்த்து பேசக்கூடியவர். நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து பேசுகிறோம். இந்த நேரத்தில் அரசியல் கருத்துகள் கூறுவது சரியாக இருக்காது. நடிகை ஜோதிகாவின் கருத்தும், இந்த நேரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. இது விளம்பரத்துக்குதான் உதவும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story