தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது? - கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எப்போது? என்பதற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில் அளித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், பேட்மாநகரம், கேம்பலாபாத், செய்துங்கநல்லூர், ஆத்தூர், அய்யனாரூத்து, தூத்துக்குடி, தங்கம்மாள்புரம், பசுவந்தனை ஆகிய 9 பகுதிகளை சேர்ந்த 27 பேர் கொரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளானார்கள். இந்த 9 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா? என்பதை கேட்டறிந்தனர். சளி, இருமல் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 25 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கட்டுப்பாடுகள் தளர்வு
அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக 28 நாட்கள் கண்காணிக்கப்படும். அந்த பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் பகுதி முதன்முதலாக மார்ச் மாதம் தனிமைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேட்மாநகரம், காயல்பட்டினம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது.
இதில் செய்துங்கநல்லூர் பகுதியில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. மற்ற சில பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கலெக்டர்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, “தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி ஒரு மண்டலத்தில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளது. 3 மண்டலங்களில் விரைவில் 28 நாட்கள் கண்காணிப்பு முடிவடைய உள்ளது. அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும். மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே அந்த பகுதிகளிலும் இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story