சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் வேலையும் இல்லை வருமானமும் இல்லை
ஊரடங்கால் வேலையும் இல்லை, வருமானமும் இல்லாததால் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.
தஞ்சாவூர்,
ஊரடங்கால் வேலையும் இல்லை, வருமானமும் இல்லாததால் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.
வெளி மாநிலத்தவர்கள்
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். கட்டிட பணிகள், செங்கல் சூளைகளில் பணிகள், ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய் விற்பனை போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மராட்டியம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தற்போது 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு தினமும் கூலியாக ரூ.500 முதல் ரூ.700 வரை வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே அவரவர்களுக்கு தங்குமிடமும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் அவதி
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து விதமாக தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலை இழந்து தாங்கள் தங்கி இருந்த முகாம்களிலேயே இருக்கிறார்கள்.
இது தவிர பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வெளி மாநிலத்தவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து கல்லூரிகளில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். அதன்படி தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கல்லூரியில், மராட்டியத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட தொழிலாளர்கள்
தஞ்சையை அடுத்த விமானப்படை நிலையம் அருகே உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பகுதியிலும் 47-க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் காண்டிராக்ட் அடிப்படையில் விமானப்படை நிலையத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் 6 மாதம் முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களும் வேலை இழந்து தாங்கள் தங்கி இருந்த முகாம்களிலேயே உள்ளனர். இவர்களுக்கு உணவுப்பொருட்களை ஒப்பந்த நிறுவனமே வழங்கி வருகிறது. இது தவிர அவ்வப்போது போலீசார் மற்றும் தன்னார்வலர்களும் உணவு வழங்கி வருகிறார்கள். வேலை இன்றி இருப்பதால் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு
இது குறித்து கொல்கத்தாவை சேர்ந்த பாபு கூறுகையில், “நான் 5 ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறேன். தற்போது ஊரடங்கு உத்தரவால் கடந்த 36 நாட்களாக நாங்கள் வேலை இன்றி தவித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் குடும்பத்தை பிரிந்து இங்கு வந்து வேலை செய்து வருகிறோம். வேலை இல்லாமல் சும்மா இருக்க விரும்பவில்லை. சும்மா இருப்பதை விட சொந்த மாநிலங்களுக்கு சென்று குடும்பத்துடன் இருக்க விரும்புகிறோம். எனவே ஊரடங்கு முடிந்து வேலைகள் தொடங்கும் வரை நாங்கள் சொந்த ஊருக்கு சென்று வாழ்வதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story