பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 13,676 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்


பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 13,676 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 30 April 2020 4:36 AM IST (Updated: 30 April 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 13 ஆயிரத்து 676 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 13 ஆயிரத்து 676 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவைக்கான காய்கறி, மளிகை, இறைச்சி, மருந்துக்கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. கட்டிட பணிகள் முதல் அனைத்து வேலைகளும் நிறுத்தப் பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதின் காரணமாக விவசாய பணிகள், கட்டிட பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

100 நாள் வேலை திட்டம்

இந்த நிலையில் கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டமும் நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டு கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 589 ஊராட்சிகள் உள்ளன. இந்த 14 ஒன்றியங்களிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று 14 ஒன்றியங்களில் 433 ஊராட்சிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 13 ஆயிரத்து 676 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும், முக கவசம் அணிந்தும் பணிகளை மேற்கொண்டனர்.

பாசன வாய்க்கால்

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்தால் தண்ணீர் பாசனத்துக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதுவும் கிளைவாய்க்கால்களில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்”என்றார்.

Next Story