தஞ்சையில் ஊரடங்கில் வெளியே சுற்றுபவர்களை டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு


தஞ்சையில் ஊரடங்கில் வெளியே சுற்றுபவர்களை டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 April 2020 4:44 AM IST (Updated: 30 April 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஊரடங்கில் வெளியே சுற்றுபவர்களை டிரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் ஊரடங்கில் வெளியே சுற்றுபவர்களை டிரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

அடையாள அட்டை

கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக மளிகை, மருந்து, இறைச்சி, பால், காய்கறிகடைகள் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வருவதற்கு 3 வண்ணங்களில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

டிரோன் மூலம் கண்காணிப்பு

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஒன்று கூடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சையில் நேற்று டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை சீனிவாசபுரம், வடக்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், சுப்பிரமணியன், ரெங்கராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சீனிவாசபுரம் பகுதியில் அகழிக்குள் உள்ள முட்புதர்களில் ஒரு முதியவர் மற்றும் சில சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் டிரோன் கேமராவை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

Next Story