அரியவகை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் இர்பான்கான் திடீர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் இர்பான்கான் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தொிவித்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் வசித்து வந்த பிரபல இந்தி நடிகர் இர்பான்கான், ‘நியூரோஎண்டோகிரைன்’ என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்த தகவலை அவரே கடந்த 2018-ம் ஆண்டு ரசிகர்களிடம் கூறினார். மேலும் இதற் காக இங்கிலாந்தில் ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இந்தியா திரும்பினார்.
கடந்த சனிக்கிழமை இர்பான் கானின் தாய் சயீதா பேகம் (வயது95) ஜெய்பூரில் உயிரிழந்தார். எனினும் ஊரடங்கு காரணமாக அவரால் தாயின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் இர்பான் கானுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பெருங்குடல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
உயிர் பிரிந்தது
ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம் நடத்திய இர்பான் கான் நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட புற்று நோயால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரின் உயிர் பிரிந்தபோது அவர் மனைவி சுதபா, மகன்கள் பாபில், ஆயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாறுபட்ட மற்றும் யதார்த்தமான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று, பல விருதுகளை அள்ளி குவித்து மரணம் அடைந்த நடிகர் இர்பான் கானுக்கு வயது 54.
இவரது உடல் நேற்று மாலை வெர்சோவா பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
கிரிக்கெட் வீரராக நினைத்தவர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவரான இர்பான்கான், சிறு வயதில் பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என கனவுடன் இருந்தார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக நடிப்பை தேர்வு செய்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். ஆரம்ப காலங்களில் டி.வி. தொடர்களில் நடித்து வந்தார். மேலும் 1990-களில் இவர் நடித்த பல படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறாமல் இருந்தன.
இந்தநிலையில் 2001-ல் வெளியான ‘தி வாரியர்' என்ற படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் ராக், ஹாசில், மக்பூல், மெட்ரோ உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார். இதில் ஹாசில் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லனுக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.
ஆஸ்கர் விருது
இதையடுத்து அவர் நடித்த தி லன்ச் பாக்ஸ், பிகு, தல்வார், லைப்இன் மெட்ரோ, பான் சிங் தோமர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதில் பான்சிங் தோமர் படம் இர்பான் கானுக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது. திரையுலகில் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு மத்திய அரசின் பத்ம விருதும் கிடைத்தது.
இர்பான்கான் இந்தி படங்கள் தவிர தி அமெசிங் ஸ்பைடர்மேன், லைப்ஆப் பை, ஜூராசிக் வேல்டு, இன்பெர்னோ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி உள்ளார். இதேபோல தாராவியை மையமாக கொண்டு இர்பான் கான் நடித்த ஸ்லம்டாக் மில்லினியர், லைப் ஆப் பை படங்கள் ஆஸ்கர் விருதை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடைசியாக அங்ரேசி மீடியம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கடந்த மாதம் 13-ந் தேதி வெளியாகி இருந்தது. ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படமும் முடங்கி போனது. இறந்த தாயின் முகத்தை நேரில் பார்க்க முடியாத இர்பான் கானின் உயிரும் அடுத்த சில நாட்களிலேயே பிரிந்து இருப்பது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மீளாத்துயரை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் இரங்கல்
நடிகர் இர்பான் கானின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர்மோடி, மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர்மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘இர்பான் கானின் மறைவு உலக சினிமாவுக்கு பேரிழப்பாகும். பலதரப்பட்ட சினிமாக்களில் மாறுப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் நினைவில் இருப்பார். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், அபிமானிகளை நினைத்து பார்க்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’’ என கூறியுள்ளார்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘நடிகர் இர்பான்கானின் மறை வால் இந்தி சினிமா கடின உழைப்பாளி, சிறந்த நடிகரை இழந்து உள்ளது’’ என கூறியுள்ளார்.
திரைஉலகம்
நடிகா் இர்பான்கானின் மறைவு இந்தி திரை உலகை கண்ணீரில் மூழ்கடித்து உள்ளது. ‘சீக்கிரமாக சென்றுவிட்டார், இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு' என இர்பான் கானின் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக் கான், அமீர்கான், அஜய்தேவ்கான், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களும், பிரியங்காசோப்ரா, அனுஷ்கா சர்மா, டாப்சி, குஷ்பூ உள்ளிட்ட பல நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சச்சின், ரோகித்சர்மா, ஷிகர் தவான் போன்ற விளையாட்டு வீரர்கள், லட்சக்கணக்கான இர்பான் கானின் ரசிகர்களும் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story