பொரவச்சேரி, திருக்களாச்சேரி ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
கொரோனா நோய் தொற்று ஏதும் உறுதி செய்யப்படாததால் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் பொரவச்சேரி, திருக்களாச்சேரி ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்று ஏதும் உறுதி செய்யப்படாததால் அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசிப்பிடங்களாக நாகை மாவட்டத்தில் 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 13 இடங்களிலும் உள்ள வீடுகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அடங்கிய பகுதிகள் “சீல்” வைக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
தொடர் கண்காணிப்பு
தடை செய்யப்பட்ட பொரவச்சேரி, திருக்களாச்சேரி ஆகிய 2 பகுதிகளிலும் 28 நாட்களாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு தன்னார்வலர்கள் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பகுதிகளில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோரை தினமும் கண்காணித்து இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் 75 நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நோய் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. எனவே பொரவச்சேரி, திருக்களாச்சேரி ஆகிய 2 தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் 28 நாட்கள் முடிவடைவதாலும், நோய் தொற்று எதுவும் உறுதி செய்யப்படாததாலும் ஊரடங்கு விதிமுறைக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்து கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மருத்துவ முகாம்களின் மூலம் நோய் தொற்று கண்டறியும் பணிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story